கே.சி.பழனிசாமி திடீர் சந்திப்பு; ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பேசியது என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சார களம் பல்வேறு சர்ச்சைகளுடன் நேற்று மாலை தான் முடிவுக்கு வந்துள்ளது. நாளைய தினம் வாக்குப்பதிவும், வரும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சந்தித்து பேசியது மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

இவ்வளவு நாட்கள் சைலண்ட் மோடில் இருந்து விட்டு அதிமுக தீர்ப்பு வெளியான சூழலில் இத்தகைய சந்திப்பு ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அவரது செய்தியாளர்கள் சந்திப்பிலேயே பதில் இருக்கிறது. அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை, ஜனநாயகத்தை விலைக்கு வாங்கும் வகையில் 250 கோடி ரூபாயை திமுக வாரி இறைத்துள்ளது.

தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு

இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய
எடப்பாடி பழனிசாமி
மவுனம் காக்கிறார். இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால். திராவிடம் என்பது சாமானியர்களை அதிகாரத்திற்கு கொண்டு வருவது தான். ஆனால் இந்த திராவிட கட்சிகள் பணம் வைத்திருப்பவர்களையே அதிகாரத்திற்கு வரும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. இதை ஏன் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, வருமான வரித்துறை கண்டுகொள்ளவில்லை.

திமுக ஆட்சி மீது விமர்சனம்

இதுபோன்ற செயல்களை அப்படியே விட்டு விட்டால் அடுத்து வரும் மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். திராவிடத்திற்கு எதிராக பல்வேறு சித்தாந்தங்கள் உயிர் பெறுவதற்கு இதுபோன்ற செயல்பாடுகள் தான் முக்கிய காரணம். திமுக ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் ஆகியவை தான் பல மடங்கு உயர்ந்துள்ளது.

அதிமுக தொண்டர்கள்

எனவே தான் நடப்பு ஆட்சியில் பொதுமக்கள் சந்தித்து வரும் சிரமங்கள், கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளேன். ஈரோடு கிழக்கு விவகாரத்தில் இடைத்தேர்தல் முடிந்த பிறகாவது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். உண்மையான அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் நிற்கின்றனர். தொண்டர்களால் தேர்வு செய்யப்படுகிற தலைமை ஆனது அதிமுகவை அடுத்த மக்களவை தேர்தலை நோக்கி வழிநடத்தும் என நம்புகிறேன்.

தீர்மானங்கள் செல்லாது

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி பக்கம் கட்சி செல்லவில்லை. பொதுக்குழு செல்லும் என்று தான் கூறியுள்ளது. அதேசமயம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள உத்தரவு பிறக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

ஊழல்வாதிகளுக்கு தண்டனை

ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. எனவே எடப்பாடி பழனிசாமி தான் இனிமேல் எல்லாம் என்று கூறி விட முடியாது. அவர் தலைமையில் எத்தனை தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என நினைத்து பாருங்கள். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகவே வந்துள்ளோம் என்று கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.