ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாய், பாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு வாலிபரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேலேரி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பழனி. இவரது மனைவி யசோதா. இவர்களது மகன் அசோக்குமார்(24) ஐடிஐ முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். மேலும் அசோக் குமாருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அசோக்குமார் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி வள்ளியம்மாள் மற்றும் தாய் யசோதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்பு அவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைத்து மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் யசோதா மற்றும் வள்ளியம்மாள் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாணாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.