பிரபல நடிகையான சுஷ்மிதா சென் கடைசியாக ஆர்யா என்ற வெப் சீரிஸில் நடித்தார். இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. இன்னும் சில வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் 3 நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுஷ்மிதா சென்னுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைப் பிறகு இப்போது நலமாக இருக்கிறார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், 2 நாட்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது நான் நலமாக இருக்கிறேன். மருத்துவர்கள் என்னுடைய இதயம் சற்று பெரிதாக இருப்பதாக தெரிவித்தனர். என்னுடைய இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளது. நலமாக இருக்கிறேன் என்பதை தெரிவிக்கவே இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுஷ்மிதா சென் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு அவருக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதா சென், 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரை சுற்றி கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. பல நடிகர்களுடன் காதல் வயப்பட்டதாக பேசப்பட்டாலும், இப்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதேநேரத்தில் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.