நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்: போலீசார் விசாரணை

புதுடெல்லி: நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இந்திய மாணவர் தூக்கத்தில் சிறுநீர் கழித்த போது, அது சக பயணி மீது கசிந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு வந்தடைந்தது. அதில் பயணித்த இந்திய மாணவர் ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக ஏர்லைன்ஸ் நிறுவனம் தரப்பில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திடமும் (டிஜிசிஏ), சிஐஎஸ்எப் போலீசாரிடமும் புகார் தரப்பட்டது. இதன் அடிப்படையில் டெல்லி போலீசார், விமானம் தரையிறங்கியதும் சம்மந்தப்பட்ட மாணவனை பிடித்து விசாரித்தனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் ஆர்யா வோரா. இவர் டெல்லி டிபன்ஸ் காலனியில் வசிக்கிறார். விமானத்தில் குடிபோதையில் இருந்த மாணவன், தூக்கத்தில் இருக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். அது அருகில் இருந்த சக பயணி மீது கசிந்துள்ளது. உடனடியாக அவர் விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவன், விமானத்திலேயே மன்னிப்பு கேட்டதால், சக பயணி, மாணவனின் எதிர்காலம் கருதி புகார் தரவில்லை. ஆனால், விமான நிறுவனம் தரப்பில் உடனடியாக புகார் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவன் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 510 (குடிபோதையில் பொது இடத்தில் தவறாக நடந்து கொள்தல்), 294 (பொது இடத்தில் ஆபாச செயல்) மற்றும் விமான போக்குவரத்து சட்டப் பிரிவுகள் 22, 23 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்.

விசாரணைக்கு பின் மாணவன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் இதே போல பயணி ஒருவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்காததால் சம்மந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது. பின்னர் சிறுநீர் கழித்த பயணி கைது செய்யப்பட்டு ஒருமாத சிறைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.