மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் (80) படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தார். இதில் அவரது விலா எலும்பு பகுதி உடைந்தது.
பாலிவுட்டின் ‛பிக் பி’ என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், தற்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி, ரியாலிட்டி ஷோ, விளம்பரங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
அரை டஜன் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியா படமான ‛புரொஜெக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுவிப்பாக நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஆக்ஷன் காட்சியின் போது எதிர்பாரதவிதமாக நிகழ்ந்த விபத்தில் அமிதாப் சிக்கி காயம் அடைந்தார். இதில் அவரின் விலா எலும்பு பகுதி உடைந்தது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அமிதாப்பிற்கு நிகழ்ந்த விபத்தால் ‛புரொஜெக்ட் கே’ படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமிதாப் தனது வலைதள பிளாக்கில் கூறியிருப்பதாவது : ‛‛ ‛புரொஜெக்ட் கே’ படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் எனது விலா எலும்பு உடைந்தது. ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு இப்போது எனது வீட்டில் ஓய்வில் உள்ளேன். வலி இருக்கிறது. இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும். எனது நலம் விரும்பிகளை சந்திக்க முடியாது. ரசிகர்கள் யாரும் வீட்டின் முன் கூட்டம் சேர வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்றார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு கூலி என்ற படத்தில் நடித்தபோது அமிதாப்புக்கு படப்பிடிப்பில் அடிபட்டது. அதன் பிறகு தற்போது பெரிய அளவில் அடிபட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement