வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற படம் தான் ‘வாத்தி’. சூர்யதேவரா நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்திருந்த இந்த படத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி, தணிகெல்லா பரணி, ஆடுகளம் நரேன், தோட்டப்பள்ளி மது, கென் கருணாஸ், சுமந்த், பாரதிராஜா இளவரசு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1990களில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரி தனியார்மயமாவதை தடுக்க ஒரு ஆசிரியர் போராடுவதை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘வாத்தி’ படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில், படம் சுமார் ரூ.100 கோடி வசூலை அள்ளியுள்ளது. நடிகர் தனுஷுக்கு இந்த ஆண்டின் முதல் வெளியீடாக அமைந்த வாத்தி படம் பெரியளவில் வசூலை அள்ளி குவித்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘வா வாத்தி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு வைப் செய்து பாடல் இணையத்தில் ட்ரெண்டானது. கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் மாணவர்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘வாத்தி’ படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த லேட்டஸ்ட் செய்தி வெளியாகியுள்ளது. ‘வாத்தி’ படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை மிக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. மார்ச் மாத இறுதியில் ‘வாத்தி’ படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.