புதுச்சேரி: கவுரவ அட்டைக்காக ரேஷன் அட்டைகளை ஒப்படைத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் – அதிகாரிகளிடம் காட்டிய கோபம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கவுரவ அட்டைக்காக தங்களின் ரேஷன் அட்டைகளை பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஒப்படைத்தனர். அப்போது மக்கள் ரேஷன் கார்டுக்காக அணுகும்போது அலைக்கழிப்பதாக அதிகாரியிடம் கோபப்பட்டு கடுமையாக பாஜக அமைச்சரும், எம்எல்ஏவும் விமர்சித்தனர்.

புதுச்சேரி மாநில பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்பி செல்வகணபதி, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கர், வெங்கடேசன் ஆகியோர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலத்துக்கு வந்தனர். தங்களின் மஞ்சள் ரேஷன்கார்டுகளை ஒப்படைத்து, கவுரவ குடும்ப அட்டை விண்ணப்பத்தை துறை இயக்குநர் சக்திவேலிடம் தந்தனர். விண்ணப்பத்தை தந்த பிறகு அங்கிருந்த துணை இயக்குநர் ரவிச்சந்திரனிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எம்எல்ஏ கல்யாணசுந்தரம் கடுமையாக விமர்சித்து துணை இயக்குநரை பேசினார்.

அதையடுத்து அமைச்சர் நமச்சிவாயமும் பணிகள் நடப்பதில்லை; அமைச்சர் சொல்லியும் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி கடுமையாக பேசினார். “உங்கள் வீட்டு வேலைக்காரர்களா நாஙகள் – தொகுதி மக்களுக்கு பரிந்துரைத்து அனுப்பும் மனுக்களை கையில்கூட வாங்காமல் வீசுகிறீர்களே – தபாலில் கொடுத்து விட்டு போகச் சொல்கிறீர்களே” என்று விமர்சித்தார்.

இச்சூழலில் எம்எல்ஏ கல்யாணசுந்தரம், “ரேஷன் கார்டு பெற விண்ணப்பத்துக்கு ஐந்தாயிரம் வரை லஞ்சம் பெறுகின்றனர். பணம் வாங்கி விட்டுதான் வேலை பார்ப்பீர்களா – தொலைத்து விடுவேன்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார். தொடர்ந்து அவருடன் வந்தோரும் தாங்கள் அலைக்கழிக்கப்பட்டதாக துறை அமைச்சர், இயக்குநர் ஆகியோரிடம் வெளிப்படுத்தினர்.

குற்றம்சாட்டப்படும் அதிகாரியை இடமாற்றம் செய்ய அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “மானியம் பெற விரும்பாதோர் கவுரவ ரேஷன் கார்டு பெற கோரியதன் அடிப்படையில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரேஷன்கார்டை ஒப்படைத்தோம். வசதியான பாஜக நிர்வாகிகள், தொண்டர்களும் தங்கள் ரேஷன் அட்டையை கவுரவ கார்டாக மாற்ற உள்ளனர். புதிய ரேஷன்கார்டு, சிவப்பு ரேன்கார்டு பெற வரும் மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர்களிடம், ரேஷன் கடை ஊழியர்கள் முறையிட்டனர். ஊதியம் தரக் கோரியும், ரேஷன் கடைகளைத் திறக்கவும் கோரினர். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.