சென்னை பெரியமேட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைச் செயலக ஊழியர் மனோகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் “பெரியமேட்டில் உள்ள நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள எனது வீட்டில் வசித்து வருகிறேன். இந்தப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தினக்கூலிகளாக வசித்து வருகின்னறனர்.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து அந்தக் கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. நான் வசிக்கும் பகுதியில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரி, மத வழிபாட்டு தளங்களும் உள்ளன.

இந்நிலையில் நேவல் மருத்துவமனை சாலையில் புதிதாக டாஸ்மாக் கடையைத் திறக்க டாஸ்மாக் மேலாண் இயக்குனர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோர் அனுமதி வழங்கி உள்ளனர்.
இந்த டாஸ்மாக் கடை செயல்பட தொடங்கினால் மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். இதன் காரணமாக டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே புதிய டாஸ்மாக் கடையைத் திறக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். எனது மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் தெரிவித்து இருந்தார்

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும்” என விளக்கமளித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பெரியமேடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடைத் திறக்க தடை விதித்து உத்தரவிட்டு மனோகர் தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்தனர்.