தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் 'யோசி'

ஜே.ஏ பிரைம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யோசி'. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என 4 இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆறுமுகம் கவனிக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஸ்டீபன் ஜோசப் கூறியதாவது:

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவி ஒருத்தி மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறாள். அவளுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த பெண்ணால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

கதாநாயகி ரேவதி வெங்கட் மும்பையை சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். அதேசமயம் நிறைய விளம்பர படங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது. இந்தி பிக்பாஸ் சீசனில் இறுதி போட்டியாளராக வந்த அர்ச்சனா கெளதம் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல் மெட்டு மலைப்பகுதியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் எந்த வசதிகளும் இல்லாத அந்த மலைப்பகுதியில் தினசரி நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அடர்ந்த காடு, வனவிலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.