புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வாழ்த்து செய்தியில், பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சர்வதேச மகளிர் தினத்தில், நமது பெண் சக்திகளின் சாதனைகளை பாராட்டுகிறேன். இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை நாம் மிகவும் போற்றுகிறோம். பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் வெளியான பெண் சாதனையாளர்களின் வாழ்க்கை பயணங்கள் குறித்த தொகுப்பையும் ட்விட்டரில் பிரதமர் பகிர்ந்தார். பெண்களின் மிகச் சிறந்த
பங்களிப்புகளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்தார். ட்விட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘பல்வேறு பயனுள்ள திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பெண்களின் மேம்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அயராது பணியாற்றி வருகிறது. உலகின் மிக உயரமான போர்க் களமான சியாச்சின் பனி மலை முதல் போர்க்கப்பல் வரை பாதுகாப்பு படைகளின் அனைத்து பிரிவுகளிலும் இந்திய பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘சர்வதேச மகளிர் தினத்தில், நமது பெண்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை பாராட்டுகிறேன். தற்சார்பு இந்தியா வின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது’’ என குறிப்பிட்டுள்ளார்.
ஹோலி வாழ்த்து: ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘அனைவருக்கும் இனிய மற்றும் வண்ணமயமான ஹோலி நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், உற்சாகமும் எப்போதும் பொங்கட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.