ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் அறுவடை முடிந்த பிறகு, புதிய மஞ்சள் வரத்து அதிகமாக இருந்ததனால் மஞ்சளின் விலை சற்று உயர்ந்தது. ஆனால் பழைய மஞ்சளின் விலையில் எந்தவிதமான மாற்றம் இல்லை.
இதுதொடர்பாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது:- “ஈரோடு சந்தைகளுக்கு பழைய மஞ்சள் வரத்து வழக்கம்போல் உள்ள நிலையியல், புதிய மஞ்சளின் வரத்தும் அதிகமாக உள்ளது.
இந்த மஞ்சளுக்கு வியாபாரிகளிடையே அமோக வரவேற்பு உள்ளதனால் புதிய மஞ்சள் அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் விற்பனையானது.
இதன் காரணமாக மஞ்சள் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். ஆகவே, வேலூர் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோடு சந்தைக்கு புதிய மஞ்சள் அதிகமாக கொண்டு வரப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.