நுரையீரலை பாதிக்கும் ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால், மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள், புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புனே நகரங்களில், ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா என்ற நுரையீரல் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இது, புறாக்களுடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படுகிறது. முன்பே இருக்கும் நாள்பட்ட நோய், உடல் உபாதைகள் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 60- 65 சதவிகிதம் அதிகம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், புறாக்களால் ஏற்படும் நோய்ப்பரவல் காரணமாக, தானே மாநகராட்சி நிர்வாகம், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாமென்று பொதுமக்களை எச்சரிக்கும் வகையில், நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், புறாக்களுக்கு உணவளிப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த சுவரொட்டிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது?
பொதுவாகப் பார்த்தால், புறாக்களின் செயல்பாடுகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது போல் தோன்றினாலும், உண்மையில் அவை மனிதர்களுக்கு பல நோய்களை உண்டாக்குகின்றன. அவற்றின் உடலில் இருந்து உதிரும் இறகுகள் மூலம், மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
அடுத்து, புறாவின் எச்சங்களும் நோய்களை ஏற்படுத்தும். எச்சங்கள் மற்றும் இறகுகளில் இருந்து தோன்றும் ஆன்டிஜென், நுரையீரலுக்குள் சென்று நோயெதிர்ப்பு திறனை பாதித்து, நுரையீரலை சேதப்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள் என்ன?
ஒவ்வாமை ஏற்பட்ட சில மணி நேரத்தில் கடுமையான அறிகுறிகள் தோன்றும். இவை, சிலமணி நேரத்துக்கோ அல்லது சில நாள்களுக்கோ நீடிக்கும். நாள்பட்ட அறிகுறிகள் மெதுவாக உருவாகி, காலப்போக்கில் மோசமாகலாம்.
நோயின் பொதுவான அறிகுறிகளாக மூச்சுத்திணறல், வறட்டு இருமல், சோர்வு, அதிக காய்ச்சல், தசைவலி, நாள்பட்ட இருமல், எதிர்பாராத எடை இழப்பு உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம். எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியபடி புறா வளர்ப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.