தர்மபுரி மாவட்டத்தில் அ.மல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவ-மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசியும், கட்டையால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு போன்றவற்றை அடித்து நொறுக்கியும் உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பறையில் ரகளையில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், ஆசிரியர்கள் பள்ளியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவ-மாணவிகளிடம் கடிதமும் எழுதி வாங்கியுள்ளனர்.
இதற்கிடையே மாணவ-மாணவிகள் வகுப்பறையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால், பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் ஐந்து மாணவர், மாணவிகளை ஐந்து நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கல்வித்துறை, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.