துரைப்பாக்கம் அருகே பிரபல கொள்ளையன் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேட்டுகுப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூ பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், இதுகுறித்து துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்து கிடந்த வாலிபர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த முருகன் என்ற கண்முடி முருகன் (22) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் முருகன், நான்கு பேருடன் சம்பவ இடத்திற்கு மது அருந்து வந்ததாகவும், அப்பொழுது அவர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் முருகனை வெட்டி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனி படைகள் அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முருகனை கொலை செய்த நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.