How to: சருமப் பராமரிப்புக்கு க்ரீன் டீ பயன்படுத்துவது எப்படி? | How To Use Green Tea For Skin Care?

உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் க்ரீன் டீ இடம் பிடித்திருக்கும். அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும் என, பலவிதங்களில் உதவும்.

உடலுக்கு உள்ளே செய்யும் நன்மைகளுடன், வெளிப்புற சருமத்திற்கும் க்ரீன் டீ இலைகள் நல்ல பலனை தர கூடியது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குதல், சருமத்தில் பளபளப்பை கொண்டு வருதல், பரு மற்றும் முகக் கருமையை நீக்குதல் எனப் பல வகைகளில் உதவும். இதற்கு க்ரீன் டீயை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா கூறும் தகவல்கள் இங்கே…

வினோத் பாமா

’’சருமத்தில் பல நன்மைகளை ஏற்படுத்தும் க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மட்டுமல்லாமல் இது ஆன்டி பாக்டீரியலாகவும், ஆன்டி ஏஜிங் ஆகவும் செயல்படுகிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கலாம். மேலும் சருமத்தில் எந்த நச்சும் சேராமலும் இருக்க உதவி புரிகிறது. இதனை பல விதங்களில் பயன்படுத்தலாம். அதில் முக்கியமான வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்…

ஸ்கரப்பர்

க்ரீன் டீயின் இலைகளை சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தேன் ஒரு டீஸ்பூன், சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து எடுத்துக்கொள்ளவும். இதனை முகம் முழுவதும் அப்ளை செய்து வட்டவடிவில் 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து கொள்ளவும்.

பின்பு சில நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென இருக்கும். இதனை வாரத்தில் இரண்டு முறை அல்லது ஒருமுறை செய்து வந்தால் மிகவும் நல்லது. இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதுடன், கருமையும் நீங்கும்.

ஃபேஸ் பேக் | மாதிரிப்படம்

ஃபேஷ் பேக்

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கடலை மாவு சிறிதளவு, தயிர் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் க்ரீன் டீ தூளை சேர்த்துக் கலந்து எடுத்துக்கொள்ளவும். இதனை சருமத்தில் பேக் போல அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு அப்படியே காயவிடவும். பின்பு இளம்சூட்டில் இருக்கும் வெந்நீரில் முகத்தை கழுவவும். இதை வாரத்தில் ஒருநாள் செய்து வரவும். முகத்தில் ஏற்படும் பருக்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

வறண்ட சருமம் உடையவர்கள் க்ரீன் டீ தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். 20 நிமிடங்களுக்குப் பின் மிதமான வெந்நீரில் கழுவவும். முகத்தில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கப்படும்.

டோனர்

ஐஸ் க்யூப் டிரேயில் தண்ணீர் ஊற்றி, க்ரீன் டீ இலைகளை போட்டு ஃபிரிட்ஜியில் வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு நாளில் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் இருக்கிறதோ அப்போதெல்லாம் முகத்தில் இந்த ஐஸ்கட்டியை எடுத்துத் தேய்த்துக் கொள்ளவும். இதனை தினமும் செய்யலாம். இதன்மூலம் முகத்தில் இருக்கும் சிறுசிறு குழிகள் மூடிவிடும். சருமத்தில் அழுக்குகள் தேங்காமல் பாதுகாக்கப்படும்.

கருவளையம்

கருவளையம்

கண்ணிற்குக் கீழ் கருவளையம் உள்ளவர்கள் க்ரீன் டீ தூள் பேக் எடுத்து குளிர் நீரில் நனைய வைத்துக்கொள்ளவும். இதனை 15 – 20 நிமிடங்களுக்குக் கண்ணிற்குக் கீழே வைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் டீ தூளுடன் தேன் சேர்த்து கண்ணிற்குக் கீழே அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். கருவளையம் குறைவதுடன், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஆவி பிடித்தல்

முகத்தில் இருக்கும் பருக்கள் சருமத்தை பாதிப்படைய வைப்பதுடன், அதிக தொற்றை ஏற்படுத்தக் கூடியது. இதற்கு க்ரீன் டீ நல்ல பலனை தரக் கூடியது. க்ரீன் டீயை ஒரு கிண்ணத்தில் எடுத்து தேவையான அளவுக்கு நீரினை ஊற்றி ஆவி வரும் வரை சூடுபடுத்தவும். இதனை கொண்டு சில நிமிடங்களுக்கு ஆவி பிடிக்கவும். வாரத்திற்கு ஒருமுறை செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.