தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில், அவர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் டி.பி.ஜி சைலேந்திர பாபு இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூரைப் பொறுத்தவரை 471 பின்னலாடை நிறுவனங்களுக்குச் சென்று காவல்துறையினர் ஆய்வு நடத்தியதுடன், சுமார் 46,000 வடமாநிலத் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திருக்கின்றனர்.

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி வீடியோ பரப்பியதாக 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அதில், ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். வதந்தி வீடியோ பரப்பியவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீடியோ பரப்பிய சிலர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருகின்றன.

வதந்தி வீடியோ பரப்புவோர்மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153 கலவரத்தை தூண்டுதல், 153(A) மதம், இனம், மொழி, வசிப்பிடங்களில் இரு பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், 504 வேண்டுமென்றே அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தூண்டிவிடுதல், 505(1) (b), 505 (1) (c), 505 (2) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்படும்.
வதந்தி செய்தி பரப்பிய ஒருவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தாலும், அவர் தமிழகத்தில்தான் கையெழுத்திட வேண்டும்” என்றார். பிகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்டதாகச் செய்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தற்காலிக முன்ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.