மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “ஒரேவீட்டில் பல்வேறு குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமென்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் செய்த அறிவிப்பு பத்திரிகைகளில் பரவலாக வெளிவந்தது.
அத்தோடு மின்வாரியத்தின் சார்பில் வீடுகளுக்கு 15 தினங்களுக்கு மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமெனவும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என சிபிஐ (எம்) கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகமும், மாண்புமிகு மின்துறை அமைச்சரும் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என அறிவித்ததோடு, ஏற்கனவே வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்த நோட்டிசை திரும்ப பெறுவது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட குழப்பம் தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரக் கூடாது என தெரிவித்துக் கொள்வதோடு, சிபிஐ (எம்) கட்சியின் சார்பில் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக (மின்விளக்கு, லிப்ட், மோட்டார்) உள்ள மின் இணைப்புகளுக்கு ஏற்கனவே வசூலித்து வந்த வீடுகளுக்கான மின் கட்டண விகிதத்தையே வசூல் செய்திட வேண்டுமெனவும் சிபிஐ (எம்) சார்பில் மின்வாரியத்தை வலியுறுத்துகிறோம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.