சென்னை: உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து பயன்படுத்த எவருக்கும் உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏழை மாணவர்கள் படிப்பதற்காக பள்ளி அமைப்பதற்காக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த தனியார் அறக்கட்டளைக்கு 6,611 சதுர மீட்டர் நிலத்தை கடந்த 1995-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒதுக்கியது. இந்த ஒப்பந்தம் 2015-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்படவில்லை.
இதற்கிடையில், நில ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அந்த நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு இருந்த தற்காலிக கட்டுமானங்களை இடித்தது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும், கட்டுமானம் இடிக்கப்பட்டதற்கு 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் அறக்கட்டளை தலைவர் நிம்மு வசந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒப்பந்தம் காலாவதியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அதே நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி உரிமை கோர முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். சட்ட ரீதியான அனுமதி, குத்தகை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து பயன்படுத்த எவருக்கும் உரிமை இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.