குவாஹாட்டி: அசாம் பகுதியில் அஹோம் ராஜ்ஜியத்தின் கமாண்டர் லசித் போர்புகான் பற்றி 42 லட்சம் கட்டுரை தொகுப்பு கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.
அசாம் மாநிலம் கடந்த 1671-ம் ஆண்டில் அஹோம் பேரரசாக இருந்தது. அப்போது அசாம் பகுதியை கைப்பற்ற முகலாய படைகள் முயன்றன. அப்போது அஹோம் ராஜ்ஜியத்தின் கமாண்டர் லசித் என்பவர் தலைமையில் பிரம்மபுத்ராவின் சராய்காட் பகுதியில் முகலாய படைகளுக்கு எதிராக போர் நடந்தது.
அப்போது ராஜா ராம் சிங் தலைமையிலான முகலாய படைகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. இதனால் லசித்துக்கு ‘போர்புகான்’ என்ற பதவியை அஹோம் பேரரசர் சக்ரத்வஜ் வழங்கினார். அத்தகைய சிறப்புமிக்க மாவீரர் லசித் போர்புகானின் 400-வது பிறந்த ஆண்டு கடந்தாண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது.
இதை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளுக்கு அசாம் அரசு ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
லசித் போர்புகான் பற்றி எழுதப்பட்ட 42 லட்சம் கட்டுரைகள் 25 மொழிகளில் இணைதயளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் மிகப்பெரிய ஆன்லைன் போட்டோ ஆல்பமாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதற்கான கடிதம், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் நேற்று வழங்கப்பட்டது.