மகளிர் உரிமைத் தொகை: யார் யாருக்கு கிடையாது? ஜெயரஞ்சன் சொன்ன தகவல்!

தமிழ்நாடு அரசு 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்னும் சில நாள்களில் தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்படும், சலுகைகள் வழங்கப்படுமா, எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றியுள்ளோம் என்றும் மீதமுள்ள வாக்குறுதிகளை வரும் காலங்களில் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு கட்டாயம் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், மகளிர் தின வாழ்த்துச் செய்தியிலும் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் கிடைக்குமா அல்லது அதற்கு சில தகுதிகள், நிபந்தனைகள் வரையறுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடியிலும் தமிழ்நாடு அரசு சில நிபந்தனைகளை விதித்திருந்தது.

அது மட்டுமல்லாமல் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சில மாதங்களுக்கு முன்னர், “மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான தரவுத் தளம் அமைத்தல், பயனாளர்களின் உண்மைத் தன்மையை ஆராய்தல் உள்ளிட்ட பணிகள் 85% நிறைவு பெற்றுள்ளன” என்று கூறியிருந்தார்.

எனவே அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இந்த திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படாது என்பது தெரியவந்தது.

எனவே யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

“நிபந்தனைகள் கண்டிப்பாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படாது. வருமான வரி கட்டுபவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படாது. எப்போது வருமான வரி கட்டும் நிலையில் இல்லையோ அப்போது வழங்கப்படும்.. அதே போல் எப்போது அரசிடமிருந்து சம்பளம் பெறவில்லையோ அப்போது அவர்களுக்கும் வழங்கப்படும். ரொம்ப விரிவாக உங்களிடம் நான் கூற முடியாது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.