கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை இழந்த நிலையில் தனது 9 வயது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் தனிமையில் இருப்பதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என கருதியவர் தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு செல்லும் போது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு சிலர் தினசரி அவரை கேலி கிண்டல் செய்தும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் பயந்து போனவர் தனது பாதுகாப்பிறக்காக மிளகாய்ப்பொடி, கத்தி போன்றவற்றை கைவசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அந்தப்பெண் தனது மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார் அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் மீண்டும் அவரை கிண்டல் செய்தபடி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளனர். இதனை தொடர்ந்து தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மீது எறிந்து தன்னை காப்பாற்ற முயன்றுள்ளார்.
உடனே அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒரு சிலர் அவரை பலவந்தமாக பிடித்து கை கால்களை துணியால் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்கம்பத்திலேயே கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அருமனை போலீசார் மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர். இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.