வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் உறுதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ் நேற்று ஆமதாபாத்தில் துவங்கிய இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை , பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பார்வையிட்டார்.

இன்று டில்லி வந்த அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன் பின் நரேந்திர மோடி கூறியதாவது: கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து செய்திகள் வந்து கொண்டே உள்ளன. இது இந்திய மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
இதற்கு அவர், தங்கள் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசின் குழு, அவர்களுடன் தொடர்பில் இருக்கும். அந்நாட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.
ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் இந்தியர்கள் ஏராளமான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இந்தியாவின் தலைமையில் நடக்கும் ஜி20 மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். செப்டம்பர் மாதம் நடக்கும் ஜி20 மாநாட்டு கூட்டத்திற்கு மீண்டும் வரும் அஸ்திரேலிய பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement