தேச நலன் கருதி மோடிதான் மீண்டும் பிரதமர் ஆகவேண்டும்: கே.பி.முனுசாமி கருத்து

கிருஷ்ணகிரி: “அதிமுகவை பொறுத்தவரையில் எங்களுக்கு தேசிய நலன் முக்கியம். ஆகவே, தேசிய நலன் கருதி மோடிதான் மீண்டும் நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் சிப்காட் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி விவசாயிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: “வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட அயர்னப்பள்ளி, நாகமங்கலம், உத்தனப்பள்ளி பகுதியில் சிப்காட் அமைக்க அப்பகுதி விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக எங்களது கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம்.

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் கேள்வி, அதிமுகவை பொறுத்தவரையில் இன்றைய பிரதமராக இருக்கக்கூடிய மோடி இந்திய திருநாட்டின் புகழை உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறார். பல்வேறு நிலைகளில் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்வதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் பாஜக தனியாக நிற்குமா? அதிமுக தனியாக நிற்குமா? என்று எங்களுக்குள் இடைவெளியை ஊடகங்கள் ஏற்படுத்தாதீர்கள். அதிமுகவை பொறுத்தவரையில் எங்களுக்கு தேசிய நலன் முக்கியம். ஆகவே தேசிய நலன் கருதி மோடிதான் மீண்டும் நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

பல்வேறு சிந்தனை உடையவர்கள் ஒரே கட்சியில் இருப்பார்கள். அவர்கள் சில ஏற்க முடியாத கருத்துக்களை சொல்லி விடுவார்கள். அனுபவம் உள்ளவர்கள் அறிவுரை கூறிவிட்டு ஒதுங்கி சென்றால்தான் நாம் நினைக்கின்ற இடத்தை அடைய முடியும். அதை விடுத்து, பதில் கூறிக்கொண்டு இருந்தால் நாம் இருக்கும் இடத்திலேயேதான் இருக்க முடியும். எங்களை இருக்கிற இடத்திலேயே இருக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் அதை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் அண்ணாவும், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் வாரிசு அரசியலை உருவாக்கவில்லை. ஆனால் கருணாநிதி முதலமைச்சரான பின் தனது மகனை வாரிசாக அறிமுகப்படுத்தினார். அவராவது பரவாயில்லை கருணாநிதி இருக்கும்வரை ஸ்டாலின் அவர்களை மேயராகவே வைத்துக் கொண்டு, இறுதி காலகட்டத்தில்தான் அமைச்சராக பதவி வழங்கினார்.

ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எந்த நேரமும் தனது மகனை அமைச்சராக வேண்டும் என்று சிந்தித்து கொண்டு இருந்திருப்பார் போல் தெரிகிறது. அப்படி வேகமாகவும் விரைவாகவும் தனது மகனை அமைச்சரவையில் அமர்த்தி விட்டு அந்தக் கட்சியின் தலைவர்களை எல்லாம் அடிமையாக வைத்துக் கொண்டிருக்கிறார்” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, அதிமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார் ஊத்தங்கரை தமிழ் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.