மும்பை, ஜெர்மனியில் குழந்தைகள் உரிமை காப்பகத்தில் உள்ள தங்களின், 3 வயது மகளை மீட்டுத் தரும்படி மத்திய அரசுக்கு, குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத்தின் ஆமதாபாத்தைச் சேர்ந்த பவேஷ், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு, தன் மனைவி தாரா மற்றும் மகளுடன் இவர் வசித்து வந்தனர்.
கடந்த 2021ல் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு பவேஷ் – தாரா தம்பதி அழைத்துச் சென்றனர்.
பரிசோதனையில், குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அதை தங்கள் பராமரிப்பில், ஜெர்மனியின் குழந்தைகள் நல அதிகாரிகள் வைத்து உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கடந்தாண்டு பிப்., மாதம், எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் வழக்கு முடிக்கப்பட்டது.
இழுத்தடிப்பு
வழக்கு முடிந்து ஓராண்டான நிலையில், பல்வேறு காரணங்களைக் கூறி, குழந்தையை பெற்றோரிடம் தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.
தற்போது, குழந்தைகள் மையத்தில் உள்ள அந்த குழந்தையை, மாதம் ஒரு முறை மட்டுமே பார்க்க பெற்றோர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, குழந்தை மீது பெற்றோருக்கு எந்த உரிமையும் இல்லை என்பது குறித்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை பறிபோன நிலையில், தன் மனைவியுடன் மீண்டும் இந்தியா வந்த பவேஷ், குழந்தையை மீட்பது தொடர்பாக மும்பையில் அதிகாரிகளை சந்தித்தார்.
அதிகாரிகள் மறுப்பு
அப்போது இவர்கள் கூறியதாவது:
ஜெர்மனி அதிகாரிகளின் பிடியில் உள்ள குழந்தையை மீட்க முடியாமல் ஒன்றரை ஆண்டுகளாக தவித்து வருகிறோம்.
சரியாக வளர்க்காததால், அந்த குழந்தைக்கு, மற்ற குழந்தைகள் போல் இயல்பாக செயல்படும் திறன் இல்லை எனக் கூறி, எங்களிடம் தர அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
எங்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்காததால், நாங்கள் அவளை இந்தியாவுக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
கலாசார வேறுபாடுகள் காரணமாக அதுவும் மறுக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தலையிட்டு, குழந்தையை மீட்க உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்