கடந்த 2006-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலங்களை, தமிழ்நாடு அரசு உதவியுடன் என்.எல்.சி நிறுவனம் சமன்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பணியை நேற்று தொடங்கியது.

இரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் தலைமையில் சுமார் 200-க்கும் கூடுதலான காவலர்களை அந்த பகுதியில் குவித்து, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் வஜ்ரா ஊர்தி, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் ஊர்திகளையும் போலீசார் கொண்டு வந்து, சாலைகளை தடுத்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு சிறைபடுத்தப்படுத்தி நிலங்கள் கையகப்படுத்தும் பணி அரங்கேறியது.

மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி போராட வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துனர்.
இந்த அராஜக நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ள பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், என்எல்சி மற்றும் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ஆம் தேதி (நாளை) பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் அறிவித்தார்.

பாமகவின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும், விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கடலூர் மாவட்ட கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு பேருந்துகளை பணிமனைக்கு கொண்டுவர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.