புதுடெல்லி: இந்தியாவில் பரவி வரும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் எச்3என்2 இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், எச்3என்2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எச்3என்2 வைரஸ் காய்ச்சலினால் சிறுவர்கள் மற்றும் இணை நோய் உடைய வயதானவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவ காலங்களில் ஏற்படும் இன்புளூயன்சா என்பது சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த இன்புளூயன்சா உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதுகுறிப்பிட்ட காலங்களில் மட்டும் அதிகரிக்கும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டிலும் 2 பருவ காலங்களில் இன்புளூயன்சா அதிகரிக்கும். ஒன்று ஜனவரியில் இருந்து மார்ச் வரை இருக்கும். இன்னொன்று பருவ மழைக்கு பின்னர் துவங்கும். தற்போது பரவி வரும் வைரஸ் மார்ச் இறுதியில் குறைய துவங்கும். இந்த சவாலை சமாளிக்க மாநில அளவிலான கண்காணிப்பு அதிகாரிகள் முழுவதும் தயாராக உள்ளனர். கர்நாடகாவில் ஹிரே கவுடா(82) என்ற முதியவர் கடந்த 1ம் தேதி மரணமடைந்தார். அவர் எச்3என்2 வைரஸ் தாக்குதலால் மரணமடைந்தார் என்பதை ஹாசன் மாவட்ட மருத்துவ அதிகாரி உறுதி செய்தார். அரியானா, ஜிந்த் மாவட்டத்தில் 56 வயது நபர் இந்த வகை வைரஸ் தாக்கி பலியானார் என அரசு அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அலர்ட்
இந்தியாவில் ஒரே நாளில் இன்புளூயன்சா வைரசால் 2 பேர் பலியான நிலையில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அலர்ட் விடுத்துள்ளது. இதுபற்றி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: பருவகால இன்புளூயன்சா துணை வகை வைரஸ் எச்3என்2 வைரஸ் குறித்து மாநிலங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வைரஸ் பரவும் நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 2 முதல் மார்ச் 5ம் தேதி வரை நாடு முழுவதும் 431 பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது. எனவே வேகமாக பரவும் வைரசை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு மாநிலங்களுடன் இணைந்து செயல்படுகிறது. நிலைமையை சமாளிக்க பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஒன்றிய சுகாதார துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.