திருவண்ணாமலை மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). இவர் போளூர் அரசு பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி (50). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஜெயந்தியை கொலை செய்த திட்டமிட்ட முருகன், நைலான் கயிற்றால் ஜெயந்தியின் கழுத்தை இறுக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து முருகன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடலாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து முருகனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.