சென்னை: சூரத் சென்னை இடையே ஆறுவழிச்சாலையாக அமையும் எக்ஸ்பிரஸ்வே பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பாதை இந்தியாவின் 2வது நீளமான எக்ஸ்பிரஸ்வே ஆகும்.
குஜராத் மாநிலம் சூரத் – சென்னை இடையே ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு, கடந்த 2019ல் வெளியிடப்பட்டது. சூரத்தில் துவங்கும் அச்சாலை, மஹாராஷ்டிர மாநிலம் நாசிக், சோலாப்பூர், மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நாசிக், சங்கம்நெர், அஹமது நகர், சோலாப்பூர், கலபுர்கி, ரைசூர், கர்னூல், திருப்பதி நகரங்கள் வழியாகவும் இச்சாலை அமைகிறது.
குஜராத்தில் 68 கி.மீ., மஹாராஷ்டிராவில் 484 கி.மீ., கர்நாடகாவில் 177 கி.மீ., தெலுங்கானாவில் 65 கி.மீ., ஆந்திராவில் 156 கி.மீ., தமிழகத்தில் 156 கி.மீ., தூரம் இச்சாலை பயணிக்கிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், இந்த சாலை அமைப்பதற்கான பணிகள் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.
தற்போது சென்னையில் இருந்து சூரத் செல்வதற்கு 1,600 கி.மீ., பயணிக்க வேண்டும். இச்சாலை பயன்பாட்டிற்கு வரும் போது, பயண தூரம் 1,270 கி.ம., ஆகவும், பயண நேரம் ஆறுமணி நேரம் வரையும் குறையும். சென்னை – மும்பை இடையிலான பயண தூரம் 100 கி.மீ., வரை குறைய வாய்ப்பு உள்ளது.

ஆறு மாநிலங்களின் சரக்கு போக்குவரத்திற்கும் இச்சாலை பயனுள்ளதாக இருக்கும். இச்சாலையில் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும். 2025- 26ம் காலகட்டத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
சாலை பணிமுதல்கட்டமாக, சூரத் – நாசிக் – சோலாப்பூர் இடையே, 504 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, சோலாப்பூர் – கர்னுால் – திருப்பதி – சென்னை இடையேயும் சாலை அமைக்கப்படும்.
இச்சாலையுடன், சூரத் அருகே டில்லி – மும்பை விரைவுச்சாலை இணைகிறது. ஜெய்ப்பூர், டில்லி, சண்டிகர், ஜம்மு காஷ்மீர் செல்வதற்கும், இந்த சாலை பெரிதும் உதவும். சென்னை – கர்னுால் இடையேயான சாலை பணிகளுக்கு மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்