தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 87 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவில்லை. எம்பி பதவிக்கு மட்டுமே போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் மறைந்ததை அடுத்து அத்தொகுதியில் போட்டியிட்டு அந்த இடைத்தேர்தலில் வென்ற நேற்று அவர் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்
நேற்று காலையில் 11:30 மணி அளவில் இளங்கோவன் பதவியேற்பார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காலை 11:30 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் சட்டமன்றத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால் 11:45 மணிக்கு தான் தலைமைச் செயலகம் வந்தார் இளங்கோவன்.
சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்ற இளங்கோவன், தனது மகன் திருமகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர், சபாநாயகர் அறைக்கு சென்றார். பகல் 12 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
காலை 11:30 மணிக்கு பதவி ஏற்பார் என்று காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , காலை 10:30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் ராகு காலம் முடிந்த பின்னர் 12 மணிக்கு பதவி ஏற்று உள்ளார் இளங்கோவன். பெரியார் பேரன் நல்ல நேரம் பார்த்து ராகு காலம் முடிந்து பதவியேற்றது திராவிட இயக்கத்தினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.