மதுரை: காவல் நிலையங்கள், சிறையில் நிகழும் சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும், இறந்தவர் குடும்பத்தினருக்கும் விசாரணை அதிகாரி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பேரையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ். இவர் 2020-ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்தார். அவரது உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி ரமேஷின் சகோதரர் சந்தோஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: சந்தேக மரணம் என புகார் வந்த நிலையில் பிரேத பரிசோதனையை மதுரை அல்லது தேனி அரசு மருத்துவமனையில் நடத்தாமல், அவசரம் அவசரமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடத்தியது ஏன்? போலீஸார் தாக்கி உயிரிழந்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் போது உரிய விதிமுறைகளை பின்பற்றாததது ஏன்?.
சந்தேக மரணங்கள் என புகார் எழுந்தால் பிரோத பரிசோதனையின்போது அதற்கான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். காவல்நிலையம், சிறைச்சாலையில் நிகழும் மரணங்களில், சந்தேக மரணம் என புகார் எழுந்தால், பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும். உடற்கூராய்வுக்கு முன்பு புகைப்படம் எடுக்கலாம்.
பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு முடிந்ததும் அதில் இறந்தவரின் பெயர், வழக்கு விபரங்களை பதிவு செய்து அதை சீல் வைத்து விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும். அவர் அதை தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும், பிரேத பரிசோதனை அறிக்கை நகல் மற்றும் வீடியோ பதிவின் நகலை இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுக்கும் வழங்க வேண்டும்.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த சட்டப்பூர்வ வாரிசு அல்லது பிரதிநிதிகள் உயர்நீதிமன்றம் செல்வதாக எழுத்துப்பூர்வமாக மனு அளித்தால், உடலை குறைந்தது 48 மணி நேரம் பிணவறையில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.