அண்மையில் ஒரு நேர்காணலில் விசிக தலைவர் திருமாவளவன், வைகோ குறித்துக் கேட்டபோது கடந்து சென்றவிதம் வருத்தமளிப்பதாக, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம், இரு கட்சித் தரப்பில் மட்டுமல்லாமல், திமுக கூட்டணிக்குள்ளும் பேசுபொருளானது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து வைகோவும் திருமாவளவனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, “இடையில் நேர்காணலில், ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல்போனவுடனே வருந்தத்தக்கவிதத்தில் ஒரு தேவையற்ற, நியாயமற்ற விமர்சனம் உலவ ஆரம்பித்தது ஊடக வெளிகளில். அவர் உடனே வருத்தப்பட்டு, `அண்ணனைப் பற்றி நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன்’ என்றார். நான் ஒன்றுமே வருத்தப்படவில்லை. `உங்கள் மேல் எந்த வருத்தமும் கிடையாது’ என்று நான் சொல்லிவிட்டேன். நேராக வந்து பேச வேண்டும் என்று வந்தார். நாங்கள் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இதைப் பற்றி ஒரு ஐந்து நிமிடங்கள்தான் பேசியிருப்போம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், “அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஈழத் தமிழர் குறித்த கருத்துகளை நான் சொல்ல நேர்ந்தது. அதில் அண்ணனின் பெயரைக் குறிப்பிட்டு குதர்க்கமான ஒரு கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு நான் அந்த இடத்தில் விளக்கம் சொல்லாமல் கடந்துபோனேன். அது தவறான புரிதலுக்கு இடம் கொடுத்துவிட்டது. ஈழ விடுதலை அரசியலில், அது தொடங்கிய காலத்திலிருந்து, விடுதலைப் புலிகள் இயக்கம் வலிமை பெற்று வந்த காலத்திலிருந்து, தமிழகத்தில், இந்திய அளவில் மிகப்பெரும் பங்களிப்பு செய்தவர் வைகோ என்பதை நாடறியும்.

ம.தி.மு.க தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்வதற்கான எல்லாச் சூழலும் இருந்தும், ஈழ விடுதலை அரசியல்தான் அவருக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்பது வரலாறு. அதை யாரும் மறுக்க முடியாது. சட்டக் கல்லூரியில் மாணவனாக இருந்த காலத்தில், ஈழத் தமிழர் குறித்து, விடுதலைப் புலிகள் குறித்து, பிரபாகரன் குறித்து அவர் ஆற்றுகிற உரையைக் கேட்பதற்காகவே இளைஞர் பட்டாளம் திரண்டு வரும் என்பது வரலாற்று உண்மை. இன்றைக்கும் உலகமெங்கும் புலம்பெயர்ந்து, பிற நாடுகளில் வாழக்கூடிய ஈழத் தமிழர்கள், மூத்த தலைவர்கள், நேரடியாகக் களத்தில் நின்ற புலிகள், உண்மையிலேயே ஈழ விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் வரிசையில் வைகோவை முதலிடத்தில் வைத்துப் பார்ப்பார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.

அந்த உரையாடலில், நான் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்பதால் தவறான ஒரு புரிதல் ஏற்பட்டுவிட்டது. இது குறித்து நான் பேச வேண்டும் என்று விரும்பினேன். அதன் அடிப்படையில் இன்றைக்குச் சந்தித்தோம். பல்வேறு பிரச்னைகள் குறித்து, தமிழக அரசியல் குறித்து, எதிர்கால அரசியல் குறித்தெல்லாம் அண்ணனோடு விரிவாகப் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலையைக் குறித்தும், ஈழத் தமிழர்களின் பிரச்னையை எவ்வாறு இன்னும் வலுவாக மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது குறித்தும் நாங்கள் மனம் திறந்து பேசிக்கொண்டோம். இந்தச் சந்திப்பு மன நிறைவாக இருந்தது” என்று கூறினார்.