“மோடியை முடிவுக்கு கொண்டுவந்தால்தான்…" – காங்கிரஸ் நிர்வாகி பேச்சும் பாஜக பதிலும்!

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க அரசு அதை ஏற்க மறுப்பதால் பா.ஜ.க அரசுக்கு எதிராக, காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “எங்கள் போராட்டம் அதானியுடன் அல்ல, பா.ஜ.க-வுடன். பா.ஜ.க-வை தோற்கடித்தால் அதானி – அம்பானி அதனுடன் சேர்ந்து காணாமல் போவார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, கிழக்கிந்திய கம்பெனியை வியாபாரம் செய்ய அழைத்து வந்தனர்.

பா.ஜ.க அரசுக்கு எதிராக, காங்கிரஸ் போராட்டம்

அதனால், 200 வருடங்கள் நாட்டையே கொள்ளையடித்து, ஆக்கிரமித்தது கிழக்கிந்திய கம்பெனி. அதுபோல மோடி, அதானி போன்ற மனிதனை கொண்டு வந்திருக்கிறார் . இனி அதானி குழு நாட்டையே அழிக்கும். நாடு மீண்டும் அடிமைத்தனத்தை நோக்கி செல்கிறது. நாட்டில் என்ன நடக்க வேண்டும் என்பதை மோடி அல்ல அதானி தான் தீர்மானிக்கிறார். மோடி தேசபக்தி பற்றி பேசுகிறார். அவர்களுக்கு தேசபக்தி என்றால் என்னவென்று கூட தெரியாது. அவர்களில் எத்தனை பேர் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்றார்கள். சுதந்திரப்போராட்டத்தில் சிறை சென்றவர்கள் அனைவரும் காங்கிரஸ் குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

நாட்டிற்காக ஐந்து தலைமுறை காங்கிரஸ் குடும்பங்கள் சிறை சென்றுள்ளனர். அந்தமான் செல்லுலார் சிறையில் ஒவ்வொரு காங்கிரஸாரின் ரத்தமும் இருக்கிறது. காங்கிரஸ் நாட்டை அடிமைதனத்திலிருந்து விடுவித்தது, மோடி போன்ற நேர்மையற்ற நபரிடம் கொடுத்திருக்கிறது. 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அப்படியே தான் இருக்கிறது. ராணுவ வீரர்கள் எப்படி மரணமடைந்தார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை. இவர்கள் தான் தேசபக்தி குறித்து பாடம் எடுக்கிறார்கள்.

பா.ஜ.க அரசுக்கு எதிராக, காங்கிரஸ் போராட்டம்

எந்த ஒரு தனிநபருக்காகவும் அல்லாமல் காங்கிரஸுக்காக உழைக்க வேண்டும். தொண்டர்கள் உயிர்ப்புடன் இருந்தால்தான் காங்கிரஸே உயிரோடு இருக்கும். நாம் ஒரு குழு. காங்கிரஸ் யாருடைய பெயராலும் இயங்கவில்லை, மாறாக, எல்லாரும் காங்கிரஸின் பெயரால்தான் பிழைக்கிறார்கள். ஏனென்றால் என்னிடம் யார் வந்தாலும், அவருக்கு என்ன பதவி கிடைக்கும், எனக்கு என்ன பதவி கிடைக்கும் என்று கேட்கிறார்கள். இதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். எனவே முதலில் காங்கிரஸை பலப்படுத்துங்கள். எந்த ஒரு தனிநபருக்கும் விசுவாசமாக இல்லாமல் காங்கிரஸுக்காக வேலை செய்யுங்கள்.

ஏனென்றால், காங்கிரஸுக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து, பிரதமர் நரேந்திர மோடியையும் முடிவுக்கு கோண்டுவர வேண்டும். அப்போதுதான் நாட்டை காப்பாற்ற முடியும். இல்லையென்றால் நாடு அழிந்து விடும்” எனக் காட்டமாக பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா

காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த பா.ஜ.க தலைவர் ஷெஹ்சாத் பூனவல்லா, “மீண்டும் காங்கிரஸ் அனைத்து வரம்புகளையும் மீறுகிறது. மோடியை முடிக்க மக்களைத் தூண்டுவது போலவும், புல்வாமாவில் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்குவது போலவும் அவரது பேச்சு அமைந்திருக்கிறது. அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் அவரை பதவி நீக்கம் செய்யுமா? அல்லது வெகுமதி அளித்து அவரது கருத்தை நியாயப்படுத்துமா? என்று பார்க்கலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.