
இந்த உலகத்தில் அதிக சம்பளம் யார் தான் வாங்குகிறார்கள் என்ற கேள்வி எழுந்ததுண்டா? நீங்கள் இந்தியாவில் ரூ. 25,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிப்பீர்களேயானால், உங்களது மொத்த ஊதியம் 10 சதவிகிதத்தின் கீழ் வரும்.

அதுவே டாப் 1 சதவிகிதம் பேர் சராசரியாக எவ்வளவு ஊதியம் வாங்குவார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா… மக்கள் தொகையில் குறிப்பிட்ட சிலரே இந்த சம்பளத்தை பெறுகின்றனர்.

பல நாடுகளில் டாப்1 சதவிகித சம்பளம் வாங்குபவர்களில் இடம்பெற ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த 1 சதவிகிதத்தில் இடம் பெற ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆண்டுக்கு ஒருவர் 9,22,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 1,93,14,978 ரூபாயை ஈட்ட வேண்டும். இந்தியாவில் பெறப்படும் ஊதியத்தை விட, இது 12 மடங்கு அதிகம்.

சிங்கப்பூரில் ஆண்டுக்கு 722,000 அமெரிக்க டாலர் அல்லது 1,51,25,178 ரூபாய் ஈட்டினால் முதல் சதவிகித சம்பளம் ஈட்டுபவர்கள் பட்டியலில் இடம் பெறலாம். ஆனால் சிங்கப்பூரில் மாத வாழ்வாதாரத்திற்கே 2,169 அமெரிக்க டாலர்கள் வரை அதாவது ஆண்டுக்கு 26028 டாலர் செலவாகும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் முதல் 1 சதவிகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களில் இடம்பெற ஆண்டுக்கு 4,88,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 1,02,23,112 ரூபாய் ஈட்ட வேண்டும். அமெரிக்காவில் ஒரு மாதம் வாழ்வதற்கான செலவு சராசரியாக 1,951 அமெரிக்க டாலர்கள்.

ஜெர்மனி 2021-ல் உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் 20-வது இடத்தை பிடித்தது. ஆண்டுக்கு 2,77,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 58,02,873 ரூபாயை இங்கு ஈட்டினால் டாப் 1 சதவிகிதத்தில் இடம் பெறலாம்.

இங்கிலாந்தில் முதல் 1 சதவிகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களில் ஒருவர் இடம்பெற 2,48,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 51,95,352 ரூபாயை பெற வேண்டும். வாழ்வாதாரத்திற்கான செலவு இங்கிலாந்தில் அதிகம் என்று கூறப்படுகிறது.

முதல் 1 சதவிகிதத்தில் ஒருவர் இடம்பெற ஆஸ்திரேலியாவில் 2,46,000 அமெரிக்க டாலர் அல்லது 51,53,454 ரூபாயை ஈட்ட வேண்டும். அதுவே கனடாவில், ஆண்டுக்கு 201,000அமெரிக்க டாலர்கள் அல்லது 42,10,749 ரூபாயை பெற வேண்டும்.

அதிக சம்பளம் வாங்கும் முதல் 1 சதவிகிதத்தில் ஒருவர் இடம்பெற சீனாவில் ஆண்டுக்கு 107,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 22,41,543 ரூபாயை ஈட்ட வேண்டும்.

இந்தியாவில் இந்த டாப் 1 சதவிகிதத்தை பிடிப்பது எளிது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நீங்கள் ஆண்டுக்கு 77,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 16,13,073 ரூபாயை ஈட்டினால் போதும்…