புதுடில்லி, வெளிநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள் நம் நாட்டில் சட்டப் பணிகளை மேற்கொள்ள இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பல கடுமையான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நம் நாட்டு நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட தடை உள்ளது. அதேபோல நம் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கும் வெளிநாட்டு நீதிமன்றங்களில் ஆஜராக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
கட்டுப்பாடுகள்
இந்நிலையில், வெளிநாட்டு வழக்கறிஞர்களும், சட்ட நிறுவனங்களும் நம் நாட்டில் சட்டப் பணிகளை மேற்கொள்ள இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவால் உள்நாட்டு வழக்கறிஞர்கள் பாதிக்கப்படாத வகையில் மிகவும் பாதுகாப்பான, பல கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய விதிகளை இந்திய பார் கவுன்சில் வகுத்துள்ளது. இதன் விபரம்:
வெளிநாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள், இந்திய பார் கவுன்சிலில் முறையாக பதிவு செய்து இங்கு சட்டப் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், இவர்கள் நேரடியாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியாது.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளருக்கு சர்வதேச சட்டம் அல்லது வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனை மட்டும் தர இந்தியா வந்து செல்லும் வெளிநாட்டு வழக்கறிஞர்கள், நிறுவனங்களுக்கு இந்த தடை பொருந்தாது.
இவர்கள் இங்கு அலுவலகம் திறக்க முடியாது. ஆண்டுக்கு 60 நாட்கள் மட்டுமே இந்த பணியை அவர்கள் மேற்கொள்ள முடியும்.
பாதுகாப்பு
பார் கவுன்சிலில் பதிவு பெற, வழக்கறிஞர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், சட்ட நிறுவனங்களுக்கு 4 லட்சம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
பதிவு பெற விரும்பும் வழக்கறிஞர்கள், மத்திய அரசின் சட்ட அமைச்சகம், வெளியுறவு மற்றும் வர்த்தக துறையிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் இந்தியாவில் சட்ட பணிகளை மேற்கொள்ள தகுதியானவர் என்பதை, அவர் சார்ந்த நாடு, வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சட்ட அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
வழக்கு விவகாரங்களில் சிக்கி தண்டனை பெறவில்லை என்பதை உறுதி அளிக்க வேண்டும்.
பதிவு கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை, உரிய காரணம் இன்றி இந்திய பார் கவுன்சில் நிராகரிக்காது. கவுன்சிலின் முடிவே இறுதியானது.
தேசிய பாதுகாப்பு, நாட்டு நலன் அல்லது வேறு முறையான காரணங்களுக்காக, வெளிநாட்டு வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்வது அல்லது புதுப்பித்தலை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்