கொல்கத்தா: பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. மேலும் மேற்குவங்க அரசின் 29 துணை வேந்தர் நியமன உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். துணை வேந்தரை நியமிப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழலில் மேற்குவங்கத்தில் ஆட்சி நடத்தும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் 2012, 2014-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்களை செய்தது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அனுபம் பெரா என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
விதிகள் புறக்கணிப்பு: அதில், “பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்கு விதிகள் 2018-க்குஎதிராக மேற்குவங்கத்தில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒழுங்கு விதிகளின்படி பல்கலைக்கழக துணை வேந்தரை நியமனம் செய்யும் குழுவில்யுஜிசி பிரதிநிதியும் இடம் பெறவேண்டும்.
ஆனால் மேற்குவங்க சட்ட திருத்தங்களில் யுஜிசிஒழுங்கு விதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் மேற்குவங்க அரசு, யுஜிசி மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ராஜஸ்ரீ பரத்வாஜ் அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:
ஒழுங்கு விதிகள் அவசியம்: பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குவிதிகளை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். மேற்குவங்க பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் பல்வேறு துணை வேந்தர்கள் யுஜிசி வரையறுத்துள்ள தகுதிகளை பெற்றிருக்கவில்லை.
துணை வேந்தர் நியமனம் தொடர்பான பல்வேறு வழக்குகளில் யுஜிசி ஒழுங்கு விதிகளை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. அந்த வகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது.
நியமனங்கள் ரத்து
துணை வேந்தர்களை மீண்டும் நியமிப்பது, அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது. இதன்படி மேற்குவங்க அரசின் 29 துணை வேந்தர் நியமன உத்தரவுகளை ரத்து செய்கிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.