ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் உஸ்கூரில், பழமை வாய்ந்த மத்தூரம்மன் கோயிலில், ஆண்டுதோறும் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், தேரை பக்தர்கள் இழுக்காமல் மாடுகள் இழுத்து செல்லும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், நேற்று கோயில் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி 12 தேர்கள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. பிறகு மத்தூரம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து 120 அடி உயரம் கொண்ட தேர்களை, மாடுகள் இழுத்து வர பக்தர்கள் பின்தொடர்ந்து வந்தனர். சுமார் 6 கி.மீ தூரத்திற்கு தேர்கள் இழுத்து வரப்பட்டன. பின்னர், மத்தூரம்மன் கோயில் அருகே மைதானத்தில், பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
