
காசோலை மோசடி வழக்கை இழுத்தடித்ததாக கூறி நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மன்னர் வகையறா என்ற படத்தை தயாரிக்க கோபி என்பவரிடமிருந்து நடிகர் விமல், ரூ.4.50 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பிறகு, அந்தத் தொகையை காசோலையாக வழங்கியுள்ளார்.
காசோலையை வங்கியில் செலுத்திய போது அவர் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன்வரவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி தொடங்கினார்.
பின்னர் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூபாய் 300 வழக்கு அபராதமாக விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
newstm.in