
புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று மதியம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இந்தியா முழுவதும் 20.87 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயாராகி வரும் வேளையில் புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புதுச்சேரி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 18 வயதான ஹேமச்சந்திரன் என்ற மாணவன் கடந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்தச் சூழலில் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் மாணவன் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.