வாக்னர்! வாக்னர்! ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஆன் டானில் இருந்து விலகிய கிளர்ச்சி படை- விண்ணை பிளந்த வாழ்த்து

மாஸ்கோ: ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஆன் டான் நகரில் இருந்து வாக்னர் படைகள் வெளியேறிய போது பொதுமக்கள் வாக்னர்! வாக்னர்! என முழக்கமிட்டு பிரியா விடை தந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டை ஆக்கிரமித்துவிட வேண்டும் என்ற முடிவில் ரஷ்யா அதிரடியாக யுத்தம் நடத்தியது. அமெரிக்காவின் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியதால் உக்ரைன் மீது ரஷ்யாவுக்கு கோபம். நேட்டோவுக்கு நேசக்கரம் விரித்ததால் நெருக்கடியை எதிர்கொண்டது உக்ரைன்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தை அமெரிக்கா கண்டித்தது- காட்டமாக பேசியது- கனத்த குரலில் மிரட்டல் எல்லாம் விடுத்தது. ஆனால் களத்துக்கு வராமலேயே உக்ரைனை நடுத்தெருவில் கைவிட்டது. இதனால் உக்ரைன், ரஷ்யாவின் கொடூரமான யுத்தத்தை எதிர்கொண்டு பேரழிவை சந்தித்தது.

உக்ரைன் மீதான யுத்தத்தில் ரஷ்யாவுக்காக அந்நாட்டு அதிபர் புதினால் களமிறக்கப்பட்டது கூலிப்படை ராணுவம். 16 மாதங்களாக ரஷ்யாவுக்காக புதினுக்காக உக்ரைனுடன் யுத்தம் நடத்திய இந்த கூலிப்படைதான் வாக்னர் படை. வாக்னர் ராணுவத்தின் தலைவர் பிரிகோஜின் அல்லது ப்ரிகோஜின். சுமார் 25,000 பேரை வீரர்களாகக் கொண்டது இந்த கூலிப் படை. ஆனால் ரஷ்யாவின் ராணுவத்துக்கும் வாக்னர் படைக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. இந்த மோதலின் உச்சம்தான் திடீரென வாக்னர் படை, ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது.

ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய வாக்னர் படை அந்நாட்டின் ரோஸ்டோவ் ஆன் டான் நகரை தன்வசமாக்கியது. அங்கிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் மாஸ்கோ நோக்கி நகர பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரங்கள் உச்சகட்ட ராணுவ பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. ரஷ்யா அதிபர் புதின் தப்பி ஓடினார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஒருவழியாக பெலாரஸ் நாட்டின் தலையீட்டால் வாக்னர் படை தமது கிளர்ச்சியைக் கைவிட்டது.

மேலும் தமது பிடியில் இருந்த ரோஸ்டோவ் ஆன் டான் நகரில் இருந்தும் வாக்னர் படைகள் வெளியேறின. அப்போது வாக்னர்! வாக்னர் என ரஷ்ய மக்கள் அந்தப் படையினர் நெகிழும் வகையில் விண்ணைப் பிளந்த கோஷத்துடன் வழி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.