திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி ஸ்ரீவாணி அறக்கட்டளை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலையில் தரகர்கள் கும்பல், பக்தர்களிடம் பணம் வசூலிப்பதை முற்றிலுமாக ஒழிக்கவே ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இதனை சிலர் அரசியல் சுய லாபத்திற்காக தேவஸ்தானம் மீது வீண் பழியை சுமத்துகின்றனர். நாங்கள் வந்த பின்னர், இதுவரை 70 இடைத்தரகர்களை கைது செய்து, மொத்தம் 214 வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியிலேயே 2018-ல் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. நாங்கள் வந்த பின்னர், 23.9.2019 முதல் அதனை மீண்டும் தொடங்கி, இதன் மூலம்வரும் வருமானம் மூலம் புதிய கோயில்கள் கட்டுவது, பழமையான கோயில்களை புதுப்பிப்பது போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்.
இத்திட்டத்திற்கு காணிக்கையாக வழங்கும் பக்தர்களுக்கு ரசீது தருவதில்லை என்பது பொய் குற்றச்சாட்டு. ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் கடந்த மே 31-ம் தேதி வரை ரூ.861 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதன் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே நடைபெற்று வருகிறது. ரூ.120.24 கோடியில் பல கோயில்களை கட்டியுள்ளோம். மற்றும் மராமத்து பணிகள் செய்துள்ளோம். தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 127 புராதான கோயில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.139 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. பஜனை கோயில்கள் மற்றும் பழங்குடி இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் 2,273 கோயில்கள் கட்ட ரூ.227.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ வாணி அறக்கட்டளை மீது எவ்வித சந்தேகங்கள் இருந்தாலும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கேட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.