புதுடில்லி,
புதுடில்லியில், பிரகதி மைதானம் சுரங்கப்பாதையில், துப்பாக்கி முனையில் 2 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து, ஹரியானா மாநிலம் குருகிராமுக்கு, சமீபத்தில் வாடகைக் கார் ஒன்றில், 2 லட்சம் ரூபாயை இருவர் எடுத்துச் சென்றனர்.
அந்தக் காரை இரண்டு பைக்குகளில் நான்கு பேர் பின்தொடர்ந்து வந்தனர்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் பிரகதி மைதானம் சுரங்கப்பாதை அருகே கார் வந்த போது, பைக்குகளில் வந்தவர்கள் துப்பாக்கியைக் காட்டி காரை நிறுத்தி, அதிலிருந்த பணப் பையை எடுத்து தப்பினர்.
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து, புதுடில்லி, ஹரியானா உள்ளிட்ட இடங்களில், போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று, கொள்ளையில் ஈடுபட்ட உஸ்மான், மிஸ்ரா, குல்தீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, மற்ற நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், புதுடில்லி மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து, 5 லட்சம் ரூபாய் ரொக்கம், கைத்துப்பாக்கிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement