'மாமன்னன்' உண்மை கதைனு சொல்றாங்களே சார்.. வந்து விழுந்த கேள்வி.. எடப்பாடி சொன்ன பதிலை பாருங்க..!

சென்னை:
மாமன்னன் திரைப்படம் உண்மை கதை என்று சொல்கிறார்களே என நிருபர் கேட்ட கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர்

சொன்ன பதில்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. மாமன்னன் திரைப்படத்தோடு எடப்பாடி பழனிசாமியையும் இணைத்து சிலர் பேசி வரும் நிலையில், இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’ . ஆரம்பத்திலேயே “தேவர் மகன் பார்ட் 2 ” என்று கூறி ஹைப்பை ஏற்றிவிட்டதால் இத்திரைப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில், கடந்த வாரம் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது.

வடிவேலு – உதயநிதி:
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினரான பிறகும் அவரை ஜாதி இழிவு எவ்வாறு துரத்துகிறது? அதனை உடைத்து வெளியே வர அவரும், அவரது குடும்பத்தினரும் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது? என்பதுதான் படத்தின் சாராம்சமாக இருக்கிறது. இதில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுவும், அவரது மகனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்துள்ளனர்.

“மாமன்னன்” தனபால்:
இது ஒருபுறம் இருக்க, இந்த திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தனபால், பல்வேறு சாதியக் கொடுமைகளை எதிர்கொண்டு வந்ததை அறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரை சபாநாயகராக ஆக்கியதாகவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி:
இது ஒருபுறம் இருக்க, இந்த திரைப்படத்தில் வடிவேலுவை (மாமன்னன்) சாதி ரீதியாக ஒடுக்கும் மாவட்டச் செயலாளர் கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருப்பார். இதனிடையே, தனபால் எம்எல்ஏவாக இருந்தபோது சேலத்தில் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். எனவே, இந்த திரைப்படத்துடன் எடப்பாடியையும் இணைத்து சமூக வலைதளங்களில் கருத்துகளும், விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மை கதையா சார்?
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர் ஒருவர், “மாமன்னன் உண்மை கதைனு சொல்றாங்களே சார்..” எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி, “நான் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. அதனால் அதுபற்றி கருத்து கூற முடியாது. அவர்கள் வேறு இயக்கம். நாங்கள் வேறு இயக்கம். எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்து திரைப்படம் வந்திருந்தால் நான் பார்த்திருப்பேன். நான் அந்த படத்தை பார்க்கவில்லை” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.