ராஜபாளையம்: ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து முடங்கியாறு சாலையில் கொட்டும் மழையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் நகராட்சி 9-வது வார்டு சம்மந்தபுரம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 20 நாட்களுக்கு முன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதன்பின் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு, குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி நடப்பதால் குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
குடிநீர் வழங்காததை கண்டித்து இன்று பிற்பகலில் கொட்டும் மழையில் காலி குடங்களுடன் முடங்கியார் சாலையில் சம்மந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி நிறுவனங்கள் மிகுந்த இப்பகுதியில் மாலை நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய் ஆய்வாளர் தங்கபுஷ்பம், வி.ஏ.ஓ பாலசுப்பிரமணியன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தினங்களுக்குள் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.