புதுடில்லி:புதுடில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவியேற்பதை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், புதுடில்லி துணை நிலை கவர்னருக்கும், ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
அரசு நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கில், ‘அதிகாரிகள் நியமனம், பணியிடமாற்றம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளில் முடிவு எடுக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, துணை நிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், அவசர சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில், புதுடில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவிக்கான நியமனம் தொடர்பாக துணை நிலை கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மாநில அரசின் பரிந்துரையை நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சகம், அலகாபாத் உயர் நீதிமன்ற முன்நாள் நீதிபதி உமேஷ் குமார் பெயரை பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து புதுடில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, ஆணையத் தலைவர் பதவியேற்பதை தற்காலிக ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படியும், பதிலளிக்கும்படியும், மத்திய அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement