தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் Tamilnadu Film Exhibitor’s Association சார்பில் தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் போலவே, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் இப்போது இரண்டு சங்களாக இருக்கிறது என்கிறார்கள். அதில் ஒரு சங்கத்தினர் தான் இப்போது டிக்கெட் கட்டணம் உயர்வு வேண்டும் என அரசிடம் மனு கொடுத்திருக்கிறது என்கிறார்கள். அந்த மனுவில் மல்டிப்ளக்ஸ் ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.250 ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.200 ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி இல்லாத தியேட்டர் கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.120 ஆகவும் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்லைனர் சீட் ( சொகுசு சாய்வு இருக்கை) உள்ள திரையரங்கில் 350, எபிக் திரையரங்கிற்கு ரூ.400ம், ஐமேக்ஸ் திரையரங்கிற்கு ரூ.450 ஆகவும் உயர்த்த அனுமதியளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டேன்.
”இதுல நூறு சதவிகிதம் எங்க சங்கத்துக்கு உடன்பாடில்லை. தியேட்டர்களுக்கு ஏற்கெனவே கூட்டமே வர்றதில்ல. எல்லாரும் ஒடிடி பக்கம் திரும்பிட்டு இருக்காங்க. ஆர்.பன்னீர்செல்வம் பொதுச் செயலாளாரக உள்ள சங்கத்தினர்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கின்றனர். இந்நிலையில் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தினால், வர்ற கூட்டமும் குறைஞ்சிடும். எங்க சங்கத்தின் சார்பில் அரசிடம் திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும், உள்ளாட்சி வரியை குறைக்கணும்னு தான் கேட்டிருக்கோம். மத்தபடி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தணும்னு கேட்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.” என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றதும், ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதைக் கண்டித்திருந்தார். “ஏற்கெனவே திரையரங்கிற்குள் வருபவர்கள் விலைவாசியால் ஓடிடி வழியாக ஹோம் தியேட்டர் கான்செப்ட்டுக்குள் புகுந்துகொண்டிருக்கிறார்கள். இன்னமும் டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்! சிறிய படங்களின் நிலை என்னாகும்?! அரசும், திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்கிற்கு வருபவர்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இதை தவிர்க்க வேண்டும்.” என்று பதிவிட்டிருப்பவர்,
நம்மிடம் இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். ”தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்து பேசாமல், இப்படி ஒரு முடிவை திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இன்றைய சூழலில் தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் வந்து படம் பார்க்க வேண்டுமெனில் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. அதனால மாதத்திற்கு ஒரு படம்தான் பார்க்குறாங்க. இப்ப டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தினால், நாலு மாசத்துக்கு ஒருமுறைதான் தியேட்டருக்கு வருவாங்க..” என்கிறார் சுரேஷ் காமாட்சி.