'லிசா' எனும் ஏஐ செய்தி வாசிப்பாளர்: ஒடிசா செய்தி சேனலின் தனித்துவ முயற்சி!

புவனேஷ்வர்: இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘OTV’ எனும் தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனலின் முயற்சி.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, செய்தியும் வாசிக்கச் செய்துள்ளனர் அந்தத் தொலைக்காட்சியின் ஊழியர்கள். ஞாயிறு அன்று இந்த விர்ச்சுவல் செய்தி வாசிப்பாளரான ‘லிசா’-வின் அறிமுகம் நடந்தது.

லிசாவை பார்க்க அசல் செய்தி வாசிப்பாளர் போலவே உள்ளது. ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிக்கும் வகையில் லிசா புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இது காட்சி ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல மொழிகளில் செய்தி வாசிக்கும் திறன் லிசாவுக்கு உள்ளதாம்.

“மீண்டும் மீண்டும் மேற்கொள்ளும் பணிகளை நாங்கள் செய்வதிலும், அதிகளவிலான தரவுகளை ஆய்வு செய்வதற்கும் லிசா எங்களுக்கு உதவும் என நம்புகிறோம். தொலைக்காட்சி ஊடக துறையில் நிச்சயம் இதுவொரு மைல்கல்” என அந்த தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ஜகி மங்கட் பாண்டா தெரிவித்துள்ளார்.

“லிசா, மனிதர்களை போல சரளமாக இன்னும் பேச தொடங்கவில்லை. ஆனால், கூகுள் டிரான்ஸ்லேட் போன்ற தளங்களின் தரத்தை அது கடந்து நிற்கிறது. லார்ஜ் லாங்குவேஜ் மாடல் (எல்எல்எம்) மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனை கொண்டு செய்தி வாசிக்கிறது லிசா. இதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என அந்த சேனலின் டிஜிட்டல் பிரிவு வர்த்தக தலைவர் லித்திஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ‘சனா’ எனும் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உருவாக்கி இருந்தது. தொடர்ந்து குவைத்தில் ‘ஃபெதா’ எனும் ஏஐ செய்தி வாசிப்பாளர் அறிமுகமானது. கடந்த 2018-ல் இதே போன்ற முயற்சியை சீனா மேற்கொண்டது. அங்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பயனர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘ரென் சியாரோங்’ எனும் ஏஐ தொகுப்பாளர் பயன்படுத்தப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.