இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து உச்சத்தை எட்டி வரும் நிலையில், வரும் வாரத்தில் இந்த போக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் வாரத்தில் இந்தியப் சந்தையில் இரண்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளன. மேலும், 4 நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு உள்ளன. ஆக வரும் நாட்களிலும் சந்தையானது முதலீட்டாளர்களின் மிகுந்த கவனம் பெற்ற ஒன்றாக இருக்கலாம்.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வரும் சந்தையில், அன்னிய முதலீடுகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தைகளில் நிலவரம் என்பது சற்று பதற்றமான சூழலில் இருந்து வரும் நிலையில், இது முதலீட்டாளர்களை இந்தியச் சந்தையின் பக்கம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டு வருகின்றன. நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.
ஐபிஓ தாக்கல்..!
இதற்கிடையில் வரும் நாட்களில் நெட் வெப் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம், தனது பங்கை ஜூலை 17 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 475 – 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் இந்த வெளியீட்டின் மூலம் 631 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 206 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வெளியீடாகவும், 425 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் புரமோட்டர்கள் வசம் இருந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது. புதிய வெளியீட்டின் மதிப்பை விட இரு மடங்கு புரமோட்டர்கள் வசம் இருக்கும் பங்கானது விற்பனை செய்யப்பட உள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
புதிய வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது கட்டுமான பணிகளுக்கும், மூலதனமாகவும் பயன்படுத்தப்படும். இது தவிர கடன்களை செலுத்தவும் பயன்படுத்தப்படும். ஜூலை 19 அன்று முடிவடைய உள்ள இந்த வெளியீடானது, ஜூலை 26 அன்று யாருக்கு எவ்வளவு பங்குகள் என்பதை ஒதுக்கீடு செய்ய உள்ளது. இறுதியாக ஜூலை 27 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம் என அறிவித்துள்ளது.

நல்ல லாபம் பார்க்க…
எத்தனை நிறுவனங்கள் வெளியீடு?
நடப்பு ஆண்டில் 13-வது வெளியீடாக இந்தப் பங்கு உள்ளது. இதற்கு முன்னதாக உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சென்கோ கோல்டு, சையண்ட் டிஎல்எம், ஐடியா போர்ஜ் டெக்னாலஜி, ஹெச்.எம்.ஏ அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், IKIO லைட்டிங், நெக்ஸஸ் செலக்ட் டிரஸ்ட் REIT, மேன்கைண்ட் பார்மா, அவலோன் டெக்னாலஜிஸ், உதய் சிவகுமார் இன்ஃப்ரா, குளோபல் சர்ஃபேஸ் மற்றும் டிவ்கி டார்க் டிரான்ஸ்பர் சிஸ்டம்ஸ், பிகேஹெச் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.
தேவை அதிகம்..!
தொடர்ந்து சந்தையில் தேவையானது அதிகம் இருந்து வரும் நிலையில் நெட் வெப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, அதன் உச்ச விலை வரம்பான 500 ரூபாயில் இருந்து கிரே சந்தையில் 60% பிரீமியத்தில் காணப்படுகிறது.
அசர்ஃபி ஹாஸ்பிட்டல்
எஸ்.எம்.இ துறையை சார்ந்த அசர்ஃபி ஹாஸ்பிட்டலும் வரும் வாரத்தில் தனது பங்கை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் வெளியீட்டு தேதியும் ஜூலை 17 அன்று திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜூலை 19 அன்று முடிவடைய உள்ளது. இதன் பங்கு வெளியீட்டு விலையாக ஒரு பங்குக்கு 51 – 52 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜார்கண்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மருத்துவ துறை சார்ந்த இந்த நிறுவனம் 26.97 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த வெளியீட்டில் 51.8 லட்சம் பங்குகள் வெளியிடபட உள்ளது. இது முழுமைக்கும் புதிய பங்கு வெளியீடாகும்.
இதில் வெளியீட்டு செலவு தவிர, மீதி தொகை அனைத்துமே மூலதனச் செலவுகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், ஜூலை 16 அன்று டீமேட்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்யலாம் எனவும், ஜூலை 27 அன்று பிஎஸ்இ எஸ்.எம்.இ-ல் பட்டியலிடப்படலாம் என தெரிகிறது.
என்னென்ன நிறுவனங்கள் பட்டியல்?
வரும் வாரத்தில் எஸ்.எம்.இ துறையை சேர்ந்த 4 நிறுவனங்கள் பங்கு சந்தையில் தங்களது பங்குகளை பட்டியலிட உள்ளன.
ஆக்சிலரேட்பிஎஸ் இந்தியா: டிஜிட்டல் சேவையை வழங்கி வரும் ஆக்சிலரேட்பிஎஸ் இந்தியா பங்கானது, ஜூலை 19 அன்று பிஎஸ்இ எஸ்.எம்.இ-ல் பட்டியலிட உள்ளதாக அறிவித்துள்ளது. 5.69 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டில் வலுவான ஓர் ஆர்வத்தை கண்டது. எதிர்பார்த்தை இலக்கை காட்டிலும் 49 மடங்கு பங்குகளுக்கான பதிவு என்பது இருந்ததாக நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காகா இண்டஸ்ட்ரீஸ்: கடந்த ஜூலை 10 அன்று தொடங்கிய இதன் வெளியீடானது, ஜூலை 12 அன்று முடிவடைந்தது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 20.2 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்பட்டது. இந்த பங்கு வெளியீட்டிலும் 290 மடங்கு பதிவை பெற்றது. ஆக இதன் பட்டியல் என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் வெளியீட்டு விலையில் இருந்து கிரே சந்தையில் 86% பிரீமியம் விலையில் காணப்படுகிறது.
இது தவிர ட்ரோன் டெஸ்டினேஷன் மற்றும் அஹசோலார் டெக்னாலஜிஸ் நிறுவனங்களும் தங்களது பங்குகளை ஜூலை 21 அன்று வெளியிட உள்ளன.
ஆக மொத்தத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல வேட்டை காத்துக் கொண்டுள்ளது என்றே கூறலாம்.