Ambalam arrested 5 terrorists in Bengaluru and planned a major sabotage operation | பெங்களூரில் 5 பயங்கரவாதிகள் கைது: மிகப்பெரிய நாச வேலைக்கு திட்டமிட்டது அம்பலம்

பெங்களூரு: பெங்களூரில் நேற்று அதிகாலை ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஏழு துப்பாக்கிகள், இரண்டு ‘சாட்டிலைட்’ போன்கள், நான்கு வாக்கி டாக்கிகள், 45 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மிகப் பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரைச் சேர்ந்த நுார் அகமது என்பவர், 2017ல் தொழில் போட்டி மற்றும் பண விவகாரத்தில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக, ஆர்.டி.நகர், ஹெப்பால், டி.ஜே.ஹள்ளியைச் சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

பெங்களூரில் 2008ல் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதி நசீர் என்பவரும் இங்கு அடைக்கப்பட்டு இருந்தார்.

சிறைக்குள் நசீருக்கும், நுார் அகமது கொலை வழக்கில் கைதானவர்களில், ஜுனைத், சையது சுஹைல், உமர், ஜனித், முதாசீர், ஜாகித் ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் ஆறு பேரையும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்படி, நசீர் மூளைச்சலவை செய்துள்ளார்.

இந்நிலையில், ஆறு பேரும் 2019ல் ஜாமினில் வந்தனர். இவர்கள் நசீருடன் பழகியிருந்ததால், போலீசார் இவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

எச்சரிக்கை

இதற்கிடையே, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளுடன், இந்தியாவில் உள்ள சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் நாடு முழுதும் நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டுவதாகவும், மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, கர்நாடகாவில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் ஆர்.டி.நகரிலிருக்கும் சுல்தான் பாளையாவில் ஒரு வீட்டில் வசித்த, சையது சுஹைல், உமர், ஜனித், முதாசீர், ஜாகித்தை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஏழு நாட்டு துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், நான்கு வாக்கி டாக்கிகள், இரண்டு சாட்டிலைட் போன்கள், ஒரு கத்தி, அமோனியம், 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவை குறித்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா அளித்த பேட்டி:

பெங்களூரில் நாச வேலைகளில் ஈடுபட சிலர் சதி திட்டம் தீட்டுவதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.

ஜுனைத் என்பவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் ஐந்து நபர்களை கைது செய்ததன் வாயிலாக, அசம்பாவித சம்பவங்களை தடுத்த, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வாழ்த்துகள். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, அத்தகைய சக்திகளை வேரறுக்க, நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். மாநில மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு, எங்கள் அரசு உறுதியாக உள்ளது.

– சித்தராமையா, முதல்வர், காங்கிரஸ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.