ஸ்ரீநகர்: காஷ்மீரில் அகதிகள் முகாமில் உயிரிழந்த கைக்குழந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளப் பெற்றோர் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மியான்மரில் ரோஹிங்கியா இனமக்களை குறிவைத்துக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிக மோசமான வன்முறை நடைபெற்றது. இதனால் அப்போது அங்கிருந்து பலரும் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்தனர்.
இவர்கள் தங்கப் பல இடங்களில் அகதிகள் முகாம் கட்டப்பட்டுள்ளன. அப்படி காஷ்மீரில் இருக்கும் அகதிகள் முகாமில் மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியா இன மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஷாக் சம்பவம்: காஷ்மீர் அருகே உள்ள அகதிகள் முகாமில் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பெற்றோர் கைவிலங்குகளுடன் அழைத்து வரப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.. குழந்தையின் இறுதி சடங்கு நடந்த இடத்தில் பெற்றோர் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் தான் இந்த அகதிகள் மையத்தில் போலீசாருக்கும் அகதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில் போலீசார் மற்றும் ரோஹிங்கியா மக்கள் உட்படப் பலர் காயமடைநதனர். இதே அகதிகள் மையத்தில் தான் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்த குழந்தை பிறந்து வெறும் 43 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. கடந்த வியாழக்கிழமை, குழந்தையின் உடல் காஷ்மீரில் உள்ள ரோஹிங்கியா செட்டில்மெண்டில் வசிக்கும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைலிலங்கு: இறுதிச் சடங்கிற்காகக் காஷ்மீரின் நர்வாலில் உள்ள உறவினர்களிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது.. குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது.. பெற்றோர் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் போலீசார் கைவிலங்கைத் தவிர்த்திருக்கலாம் என்றே கருத்து கூறி வருகின்றனர்.
கடந்த வாரம் அகதிகள் முகாமில் நடந்த மோதலில் குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். இருப்பினும்,இந்தத் தகவலை போலீசார் மறுத்துள்ளனர். நோய்ப் பாதிப்பு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும் தடுப்பு மையத்தில் மோதல் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னரே இது நடந்ததாக முகாமின் இன்சார்ஜ் எஸ்பி கவுசல் குமார் தெரிவித்தார்.

அகதிகள் முகாம்: காஷ்மீரில் உள்ள இந்த மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் 144 பேர் உட்பட மொத்தம் 271 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரோஹிங்கியா இன மக்கள் இருக்கும் இந்த முகாமில் கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டது. இதில் கல் வீச்சில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தங்களைச் சொந்த நாடான மியான்மாருக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த மையத்தில் வசித்த ரோஹிங்கியா மக்கள் பலரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அப்போது தான் திடீரென இரு தரப்பிற்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இவர்களின் கோரிக்கையை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டதாகவும் உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் முடிவெடுத்த பிறகு மட்டுமே அவர்களை மியான்மாருக்கு அனுப்ப முடியும் என்றும் இன்சார்ஜ் எஸ்பி கவுசல் குமார் தெரிவித்துள்ளார்.