இந்திய-ரஷ்ய தயாரிப்பு பிரமோஸ் ஏவுகணை.. அமெரிக்க ஆயுதங்களால் கூட தடுக்க முடியலையாம்.. உக்ரைன் டென்ஷன்

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தும் அதி நவீன ஆயுதங்களை எல்லாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆயுதங்களின் மூலம் உக்ரைன் வழிமறித்து தாக்கி அழித்து விடுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணை மட்டும் உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விடுவதாக உக்ரைன் பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன.

உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. சிறிய நாடான உக்ரைனை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற கனவுடன் போரை தொடுத்த ரஷ்யாவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. உக்ரைனுக்கு பக்க பலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குதித்தன. நிதி உதவி மட்டும் இன்றி ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அளித்து வரும் உதவியால் உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவில் மண்னை அள்ளி போட்டுவிட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும் இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவால் கைபற்ற முடிந்தாலும் நினைத்தது போல போரில் ரஷ்யாவுக்கு எதுவும் நடக்கவில்லை.

ரஷ்யாவும் பெரும் பொருளாதார இழப்பை உக்ரைன் மீதான போரால் இழந்துள்ளது. வீரர்களையும் பலி கொடுத்துள்ளது. இப்படி, ரஷ்யாவுக்கு சிம்ம சொப்பனமாக உக்ரைன் விளங்கி வருகிறது. ரஷ்யா ஏவும் ஏவுகணைகளையும் வழியிலேயே மறித்து அழிக்கும் உக்ரைனால் நாட்டால் ஒரே ஒரு ரக ஏவுகணைகளை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லையாம்.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரிக்கும் பிரமோஸ் ரக ஏவுகணைகளை மட்டுமே உக்ரைனால் சமாளிக்க முடியாத நிலை இருப்பதாக உக்ரைன் விமானப்படை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை எப்படி உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுகிறது என்ற ஐயம் வரலாம். அதற்கான காரணம் என்னவென்றால், பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்து வருகின்றன. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் இந்த ஏவுகணை சீறிப் பாயக்கூடியது.

இந்தியாவில் பிரம்மோஸ் என்று அழைகப்படும் இந்த ஏவுகணை ரஷ்யாவில் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ என்று அழைக்கப்படுகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் பல்வேறு அதி நவீன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இந்த ஆயுதங்களை எல்லாம் அமெரிக்கா, மற்றும் ஐரோப்ப்பிய ஆயுதங்களின் மூலம் உக்ரைன் வழிமறித்து தாக்கி அழித்து விடுகிறது.

ஆனால், பிரம்மோஸ் ஏவுகணை ( ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’) மட்டும் உக்ரைன் பாதுகாப்பு அமைப்பின் பாதுகாப்பு வளையத்தை கடந்து அந்நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விடுவதாக உக்ரைன் பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து உக்ரைன் விமானப்படை வட்டாரங்கள் கூறுகையில், ” கடந்த 20 ஆம் தேதி உக்ரைனின் ஒடேசா நகரத்தில் ரஷ்யா தனது காலிபர் மற்றும் பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதில் ரஷ்யாவின் காலிபர் ஏவுகணையை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தி விட்டன. ஆனால், பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணையை தாக்க முடியவில்லை. இந்த ஏவுகணைகள் மணிக்கு 3,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்வதோடு இலக்கை தாக்கும் போது கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் பறக்கிறது. இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது கடினமான ஒன்றாக உள்ளது என அதிகாரிகள சொல்கிறார்களாம்..

இது குறித்து இந்திய பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ரஷ்யா வசம் இருக்கும் பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளைவிட இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிக திறன் மிக்கவை ஆகும். இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் 450 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயும் திறன் கொண்டது. இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை வாங்க பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.